தஞ்சை மே: 27, தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் “யாஸ்” புயல் எதிரொலியாக மல்லிப்பட்டினத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் நாட்டுப்படகுகள் சிக்கி சேதமடைந்தன. படகுகளை பாதுகாக்கும் விதமாக தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுபட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுகமங்குடா, காரங்குடா, அடைக்கத் தேவன், மந்திரிபட்டினம், அண்ணாநகர், புது தெரு, செம்பியன் மாதேவிபட்டினம், கணேசபுரம், உள்ளிட்ட 32 மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் 4500 நாட்டுப் படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். மல்லிப்பட்டினம் வயல் தோட்டம் சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 146 விசைப் படகுகளும் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் ரூபாய் 66 கோடி செலவில் நவீன மயமாக்கப்பட்டது. அங்கு தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை, தூண்டில் வளைவு அமைக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தூண்டில் வளைவு இல்லாததால் மீன்பிடி படகுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடல் சீற்றத்தின் போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் 88 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுக்குநூறாக நொறுங்கி மீனவர்கள் கடும் கஷ்டத்தையும், வேதனையும் சந்தித்தனர். மீன்பிடி தடை காலம் என்பதால் தற்போது சேதுபாவாசத்திரம் மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களில் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
நாட்டுப் படகுகளும் கடல் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வங்க கடலில் உருவான “யாஸ்” புயல் நேற்று ஒடிசா அருகே கரையை கடந்தது. இதன் எதிரொலியாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை கடல் சீற்றமாக இருந்தது.
சூறாவளி காற்றால் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் கரையில் தூக்கி வீசப்பட்டன. அப்போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி இதில் ஒரு சில நாட்டுப் படகுகள் சேதமடைந்தன. படகுகளை இயற்கை சீற்றத்தில் இருந்து படகுகள் பாதுகாக்க உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்,
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.