தஞ்சை சூன் 30: சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வயல்களில் எலிகள் தொல்லை அதிகம் இருப்பதால் அவற்றை பொறி வைத்து பிடிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இவ்வாறு பிடிக்கப்படும் எலிகளை தொழிலாளர்கள் ரூ.100-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

உணவு தானியங்களை சேதப்படுத்துவதால், எலிகளை விவசாயிகளின் பகைவன் என்றே கூறலாம். வயல் வரப்புகளில் வளை தோண்டி அவற்றில் வாழும் எலிகள் நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி சேதத்தை ஏற்படுத்தும்.

நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இரை கிடைக்காத காலத்தில் அவற்றை பயன்படுத்தும். நெற்கதிர்கள் மட்டுமின்றி கோதுமை, மக்காச்சோளம், சிறுதானியங்கள், கரும்பு, நிலக்கடலை, எள், காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகிய பல பயிர்களை எலிகள் சேதப்படுத்துகின்றன.

இப்படி விளை பொருட்களை சேதப்படுத்தும் எலிகளை கிட்டி என்ற பொறியை வைத்து விவசாயிகள் பிடிப்பார்கள். அப்படியும் எலிகளை கட்டுப்படுத்த முடியாது. விவசாய நிலங்களை சேதப்படுத்தும் எலிகளை பயிர் அறுவடைக்கு பின் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டி சமப்படுத்தியும், புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்துவது வழக்கம்.
தற்போது குறுவை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆறுகளில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றங்கரை பகுதிகளில் வளை அமைத்து வசித்து வந்த எலிகள் எல்லாம் விளைநிலங்களை நோக்கி வந்துள்ளன. விளை நிலங்களில் பொந்து அமைத்து வசித்து வருகின்றன. இந்த எலிகளை பிடித்து விற்பனை செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குடும்பத்தினருடன் இந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றங் கரையோரம், வெட்டாறு கரையோரத்தில் விளை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் இன்னும் குறுவை சாகுபடிக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. சில இடங்களில் வடிகாலில் வரக்கூடிய தண்ணீரை மட்டும் வயல்களில் உழவு செய்வதற்கு வசதியாக நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் சாகுபடி பணியை தொடங்காத வயல்களில் எலிகளை பிடிக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர்.

வயல்களில் ஆங்காங்கே பொந்துகள் காணப்பட்டன. அந்த இடங்களில் எலிகளை பிடித்தனர். உடனே எலியின் வாலை கொண்டே அதன் பற்களை உடைத்துவிட்டு, அவர்கள் கொண்டு வந்த பைகளில் போட்டு வைத்தனர். இந்த பணியில் வல்லம்புதூர் பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் ஈடுபட்டனர்.

இப்படி பிடிக்கப்படும் எலிகளை விற்பனை செய்து வருகின்றனர். சிறிய எலிகள் என்றால் ரூ.100-க்கு 4 எலிகளும், பெரிய எலிகள் என்றால் ரூ.100-க்கு 3 எலிகளும் விற்பனை செய்வதாக அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன், மீன், புறா, நண்டு, இறால் என பல வகைகள் இருந்தாலும் நெல் அறுவடை பருவத்தில் எலிக்கறியையும் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்