தஞ்சாவூர்: முழு ஊரடங்கால் டெல்டா மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெள்ளரி அழுகி வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், அம்மாபேட்டை, திருப்பனந்தாள், திருவையாறு, பூதலூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் வெள்ளரியை சாகுபடி செய்துள்ளனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் அதிகளவு வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் மருதூர், தென்னம்பலம், நெய்விளக்கு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரிய குத்தகை, செம்போடை, நாலுவேதபதி பகுதிகளில் சுமார் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது கொரோனா முழு ஊரடங்கு காரணமாக வெள்ளரிக்காய்கள் விற்பனையாகாமல் வயலில் செடியிலேயே முற்றி அழுகி வீணாகி வருகிறது.

கடந்த மாதம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ 5 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கடும் நஷ்டம் அடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்