தஞ்சாவூர்: மலேசியாவில் கொத்தடிமையாக இருக்கும் தனது கணவரை மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (44). இவருடைய மனைவி அமராவதி. இவர்களுக்கு ஆதித்யன் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ஆதித்யன் 6-ம் வகுப்பும், பிரியதர்ஷினி 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

2 ஆண்டுக்கு முன்பு முருகானந்தம் மலேசியாவிற்கு ஓட்டல் வேலைக்காக அழைத்து செல்லப்பட்டார். தற்போது உடல் நிலை சரியில்லை என கூறி சொந்த ஊருக்கு திரும்ப முருகானந்தம் முடிவு செய்து நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அவர்கள் முருகானந்தத்தை விட மறுத்ததுடன் கொத்தடிமை போல நடத்தி வருவதாகவும், கடந்த 5 மாதங்களாக சம்பளம் தரவில்லை எனவும், எப்படியாவது என்னை ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யும் படியும் தனது மனைவியிடம் செல்போனில் பேசும்போது கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து தனது கணவரை மீட்டு தர வேண்டும் என அமராவதி தனது மகன் ஆதித்யனுடன் வந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், எனது கணவரை கொடுமைப்படுத்தி வருகின்றனர். எந்த நேரம் என்ன ஆகும் என்று தெரியாமல் போராடும் எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதுடன் முகவர், ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்