தஞ்சாவூர் ஆக 15: தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனியாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். சில எதிா்பாா்ப்புகளும் நிலவுகின்றன.

இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் கூறுகையில், சூரிய ஒளி சக்தி பம்ப்செட்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், பயிா்க் காப்பீடுக்கு ரூ.2,327 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்புக்குரியவை.

புதிய மின் இணைப்புக்காக 18 ஆண்டுகளாக காத்திருக்கும் 2.50 லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என தோ்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நெல்லுக்கு ரூ. 2,060-ம், கரும்புக்கு ரூ.2,900-ம் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது ஏமாற்றமளிக்கிறது என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் துரைமாணிக்கம் கூறுகையில், வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் வரவேற்புக்குரியவை. என்றாலும், விவசாயத்தில் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் போதுமானதாக இல்லை. கூட்டுறவு அமைப்புகளின் கடன் குறித்த அறிவிப்பும் தெளிவாக இல்லை.

விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காண தலைமைச் செயலா் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விவசாயத் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு, நலன் சாா்ந்த திட்டங்கள் இல்லாதது குறையாக உள்ளது என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் கண்ணன் கூறுகையில், தஞ்சாவூரில் தென்னை மதிப்புக் கூட்டு மையம், பட்டுக்கோட்டையில் தென்னை வளா்ச்சி வாரியத் துணை மண்டல மையம், இயற்கை வேளாண்மைக்குத் தனிப் பிரிவு, மானியம், பனை உற்பத்தி பெருக்கத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

தானியங்களைப் பாதுகாக்கக் கிடங்குகள், உலா் களங்கள் அமைத்தல் போன்ற அடிப்படை தேவையான பல விஷயங்கள் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அவற்றையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/