தஞ்சை சூன் 16 : தஞ்சை இன்று பாசனத்திற்காக கல்லணை திறப்பு… மேட்டூர் அணையில் ஜூன் 12-ம்தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையிலிருந்து பாசனத்துக்காக இன்று (ஜூன் 16) தண்ணீர் திறக்கப்படுகிறது.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வரத்து விநாடிக்கு 892 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் மாயனூர் தடுப்பணையையும், அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் முக்கொம்பு மேலணையையும் வந்து சேர்ந்தது.

முக்கொம்புக்கு தண்ணீர் வரத்து நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்தது. இந்தத் தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத் துறையின் உதவிச் செயற்பொறியாளர் ஜெயராமன், உதவிப் பொறியாளர் கோபிகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளர்கள் ஆறுமுகம், அறிவொளி ஆகியோர் தண்ணீரைத் திறந்துவைத்து, மலர்கள் மற்றும் விதைகளைத் தூவி வணங்கினர்.

இந்நிகழ்வில் விவசாய சங்கநிர்வாகிகள் சிவசூரியன், பூ.விசுவநாதன், நடராஜன், ராஜலிங்கம், துரை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முக்கொம்பில் திறக்கப்பட்டுள்ள நீர் நேற்று பிற்பகல் கல்லணையை வந்தடைந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று (ஜூன் 16) காலை காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், சிவசங்கர் ஆகியோர் தண்ணீரை திறந்து வைக்க உள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.