தஞ்சாவூர் ஆக் 03: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம்புதூர் ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:
தமிழக அரசு வருடத்திற்கு 4 முறை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம்புதூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறுதிட்டங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்தும், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதி திட்டபணிகள் குறித்தும் தூய்மை பாரத இயக்கம் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நெகிழிக்கு மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள், வாய்க்கால்களை சுத்தப்படுத்தும் இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூகதீமை நிராகரிப்பு உறுதிமொழி மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல் உறுதிமொழி ஆகியவை பொதுமக்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் மற்றும் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி, வல்லம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி தோட்டம் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மோகன், மகளிர் திட்டம், திட்டஅலுவலர் பாலகணேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வைஜெயந்திமாலா கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதி, ஊராட்சித் தலைவர் சாரதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/