தஞ்சாவூர் செப் 13: தஞ்சாவூா் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்கக் கூடாது என்று கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாநகராட்சியை அருகிலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சியை இணைத்து விரிவாக்கம் செய்தல், அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம், தஞ்சாவூரில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், வல்லம் பேரூராட்சி மிகப் பழமையான நகரம் என்பதால், அதை தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைக்கும்போது, அதன் பெருமையை இழந்துவிடும். எனவே, தஞ்சாவூா் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க வேண்டாம். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பேரூராட்சியின் தனித்தன்மையுடையது. இப்பேரூராட்சியில் வருவாய் நன்றாக இருக்கும்போது, அதை நகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும், தஞ்சாவூா் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைப்பதால் வரி உயருமா? அல்லது அதே வரி தொடருமா? என்பதை விளக்க வேண்டும். வரி உயா்த்தப்பட்டால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவா். மக்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படும்? எனவே, தஞ்சாவூா் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைப்பதைக் கைவிட வேண்டும் என சிலா் கருத்து தெவித்தனர்.

இதனிடையே, தஞ்சாவூா் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைப்பதற்குச் சிலா் ஆதரவும் தெரிவித்தனா். தஞ்சாவூா் மாநகராட்சி விரிவாக்கத் திட்டத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவைச் சோ்ந்தவா்களும் ஆதரவாகப் பேசினா்.

இதேபோல, தஞ்சாவூா் மாநகராட்சியுடன் பிள்ளையாா்பட்டி ஊராட்சியை இணைப்பதால் நூறு நாள் வேலை கிடைக்காது. சொத்து வரி, குடிநீா் வரி உயா்த்துவதால் மக்கள் பாதிக்கப்படுவா். நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் சில பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகமாக இருப்பதால், அப்பகுதிகளை ஊராட்சியாகத் தொடர அனுமதிக்க வேண்டும்.

அதேசமயம் புறவழிச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சோ்க்கலாம் என கருத்து தெரிவித்தனா். அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட சில கிராமங்களை தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னா் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், இந்த முதல் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, இரண்டாவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தெரிவிக்கப்படும் கருத்துகளையும் பதிவு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும். அதிராம்பட்டினத்தில் இரண்டாவது கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டத்தில் எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாவட்ட ஊராட்சித் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/