தஞ்சை மே 24: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடன் திறக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சி ஒன்றியச் செயலா் செந்தில்குமார் தெரிவித்திருப்பது:

அம்மாபேட்டை ஒன்றியத்தில் 5,700 ஹெக்டோ் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை குவியல் குவியலாக கொட்டி வைத்து விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.

இதுவரை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் நிலையங்களில் கொட்டப்பட்டுள்ள நெல்லும் தற்போது பெய்து வரும் மழையில் நனையும் நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனா். தனியார் வியாபாரிகளும் குறைந்த விலைக்கே நெல்லை கொள்முதல் செய்கின்றனா்.

பெரும் அளவிலான தனியார் வியாபாரிகளும் நெல்லை கொள்முதல் செய்யாமல் இருப்பதால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மிக பெரிய அளவில் தேங்கி வருகிறது. எனவே, விவசாயிகளின் நெல்லை காலத்தோடு கொள்முதல் செய்ய அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்