தஞ்சாவூர் ஆக 12: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இபி காலனியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை சாலை இபி காலனியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம், ரேஷன் கடை, நூலகம் இயங்கி வருகிறது. மேலும் தேவன் நகர், மாதா நகர், கஜ லட்சுமி நகர், வங்கி ஊழியர் காலனி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது ஜல்லிகள் பெயர்ந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் உள்ள ஆர் எம் எஸ் காலனி, சீதா நகர், போஸ்டல் காலனி, பாப்பா நகர், செந்தமிழ் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கும் இந்த சாலை பயன்படுகிறது.

இந்த சாலை வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு ஒரு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்துள்ள இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/