தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே தற்காலிக பாலம் உள்வாங்கியதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக பாலத்தின் கீழ் மேலும் நெருக்கமாக குழாய்கள் அமைத்து கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ரெட்டவயல் அருகே அம்புலியாற்றின் குறுக்கே பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அண்மையில் மாற்றுப் பாதைக்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக பெருமகளூா், திருவாப்பாடி, கட்டுமாவடி, நாகுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் செல்வது வழக்கம்.
குழாய்கள் அமைத்து அதன் மீது ஜல்லி பரப்பப்பட்டு பாலம் அமைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் பாலத்தின் மையப் பகுதி உள் வாங்கியது. இதனால் இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக பொதுமக்கள் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசர த் தேவைகளுக்கு பொதுமக்கள் உடனடியாக செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது. தற்காலிக பாலத்தின் கீழ் மேலும் நெருக்கமாக குழாய்கள் அமைத்து, கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்தி நாகராஜன் நிருபர்
http://thanjai.today/