தஞ்சாவூர் டிச 19: பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டிற்காக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிட வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் தஞ்சை மாவட்ட சிபிஐ அலுவலகத்தில் மாநில தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.

மாநிலச்செயலாளர் மஞ்சுளா நடைபெற்ற பணிகள் குறித்தும், பெண்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வரும்நிலைகள், புறக்கணிக்கப்பட்டு வரும் நிலைமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். மாநில துணை செயலாளர் கண்ணகி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நிஷாசத்யன், தமயந்தி வளர்மதி சுந்தரவல்லி, ராஜலட்சுமி, லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி வரவேற்றார், பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

இதில் பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீட்டிற்கான மசோதா முதன்முதலாக நாடாளுமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டு செப்.,12ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2010 மார்ச்10ல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ள ஒன்றிய பாஜக அரசு 33 சத இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை மக்களவையில் இதுவரை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றி வருகிறது.

பெண்கள் நலனில் அக்கறையுள்ள தமிழக அரசு சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தனித் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு, செயல் திட்டங்களுக்கு நிர்பயா நிதியை முறையாக, முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நிர்பயா நிதியில் சுமார் ரூ.190.68 கோடி வழங்கி உள்ளது. அதில் 6 கோடியை மட்டும் தமிழக அரசு பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கான செயல் திட்டங்களுக்கு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

கிராமப்புற ஏழை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வலியுறுத்த வேண்டும். நெல்லிற்கான ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், ஓராண்டும் மேல் தொடர்ந்து உறுதியுடன் போராடி பல்வேறு அடக்குமுறைகளையும், துன்பங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள விவசாயிகளுக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது,

பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்க வேண்டும். குடும்ப வன்முறை சட்டம் 2005 அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் அறிவிப்பை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்த சமீபத்திய ஒன்றிய அமைச்சரவை கூட்ட முடிவால் எந்தவித நன்மைகளும் பெண்களுக்கு ஏற்பட போவதில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சம ஊதியம் உள்ளிட்ட நலத் திட்டங்களை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/