தஞ்சாவூர், நவ.24- தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு மேற் கொண்டனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்த கனமழையானது தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டது. இதனால் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குழு ஏற்கனவே ஆய்வு செய்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெள்ள சேத பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்ககோரியும், பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் தமிழகத்திற்கு வருகை தந்து பார்வையிட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள சேத விவரங்களை பார்வையிட 7 பேர் கொண்ட மத்திய குழு  கடந்த 21ந்தேதி  சென்னை வந்தனர்.

இக்குழுவினர் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு குழுவினர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், மற்றொரு குழுவினர் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் மத்திய குழுவின் 2 அணிகளும் பிரிந்து 2- வது நாளாக தங்களது ஆய்வை தொடங்கினர். 

அதன்படி உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜீவ்சர்மா தலைமையில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன்துறை இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அதிகாரி ராணஞ்சாய்சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று 23-ந்தேதி காலை 10 மணியளவில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சென்றனர். 

அங்கு பல்வேறு இடங்களில் வெள்ள சேத விவரங்களை கணக்கெடுத்து குறித்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். 

அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் புத்தூர் கிராமத்துக்கு  மதியம் 12 மணிக்கு வந்தனர். அவர்களிடம் மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் வேளாண் துறை அதிகாரிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் இடிந்து விழுந்த வீடுகளின் விவரங்கள், பயிர்கள் சேத விவரம் மற்றும் பல்வேறு சேத விவரங்கள் குறித்த அறிக்கைகளை அளித்தனர். 

இதையடுத்து மழையால் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மத்திய குழுவினருக்கு கலெக்டர் லலிதா மற்றும் அதிகாரிகள் வெள்ள சேத பாதிப்புகளை விரிவாக எடுத்து கூறினர். 

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்தனர். 

பின்னர்  மதியம் 2 மணியளவில் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு சென்று  மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.

இதையடுத்து நேற்று மாலை 3 மணிக்கு நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் கிராமத்துக்கு சென்று மத்திய குழுவினர் ஆய்வை தொடர்ந்தனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வெள்ள சேத விவரங்களை எடுத்து விரிவாக எடுத்து கூறினர். அதனை மத்திய குழுவினர் குறிப்பெடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாலை சுமார் 6  மணியளவில் திருவாரூர் மாவட்டம்  காவனூர் மற்றும் கோவில்வெண்ணி ஆகிய  இடங்களிலும், அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் உக்கடை ஊராட்சி அருகே உள்ள சேர்மாநல்லூர் கிராம பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொன்றனர்.

பின்னர் இக்குழுவினர் சாலை மார்க்கமாக தஞ்சை வழியாக திருச்சிக்கு சென்றனர். பின்னர் திருச்சியில் இரவு உணவை முடித்து கொண்டு விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இதையடுத்து இன்று (24-ந் தேதி) காலை 10 மணிக்கு 2 குழுவினரும் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தி விட்டு மாலையில் டெல்லி திரும்புகின்றனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/