தஞ்சாவூர் அக்: 1 – தஞ்சை மாவட்டம், பேராவூரணி. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வீரியங்கோட்டை மற்றும் கைவனவயல் கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கான மயானத்திற்கு செல்ல சாலை வசதி, மயானத்திற்கு காங்கிரீட் கொட்டகை, கல்லணை கால்வாயின் கிளை வாய்க்கால் குறுக்கே பாலம் அமைத்து தர வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பேராவூரணியை அடுத்த பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் பி.சத்தியநாதன், மாவட்ட துணைத்தலைவர் களப்பிரன், மாநில குழு உறுப்பினர் எம்.சிவகுரு, நிர்வாகி கரிகாலன், தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.அபிமன்னன், வீ.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி (சேதுபாவாசத்திரம்), ஏ.வி. குமாரசாமி (பேராவூரணி), திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் மைதீன், ஆனந்தகுமார், திராவிடர் கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சி கழகம் பைங்கால் மதியழகன், மனிதநேய ஜனநாயக கட்சி எஸ்.அப்துல் சலாம், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஜீவானந்தம், மாதர்சங்கம் இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 

இதில், வீரியங்கோட்டை, கைவனவயல் கிராமத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக சேதுபாவாசத்திரம் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், வீரியங்கோட்டை கைவனவயல் கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கான மயானத்திற்கு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை போடப்படவில்லை. குண்டுங்குழியுமான மண் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. சுடுகாட்டிற்கு கொட்டகை இல்லை. இதனால் மழைக்காலத்தில் எரியூட்ட முடியாத அவலம் உள்ளது. 

மழைக்காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வரும் போதும், மயானத்திற்கு செல்ல வாய்க்காலில் தண்ணீரில் இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. அதேபோல் வீரியங்கொட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதிகாரிகள் சந்திப்பு 

தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது, 

“வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுடுகாட்டு கொட்டகை, சாலை வசதி உள்ளிட்டவை விரைந்து செய்து தரப்படும்” என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் “அலைபேசியில் தொடர்பு கொண்டு, சாலை அமைக்க ஒரு வார காலத்தில் அளவீடு செய்யப்படும் எனவும், மற்ற கோரிக்கைகளை விரைந்து செய்து தருவதாகவும்” உறுதியளித்தார். அதிகாரிகளின் சமரசத்தை அடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/