தஞ்சாவூர் செப் 07: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
நெற்பயிா் சாகுபடிக்கு உகந்த நுண்ணுயிா் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தும் வகையில், நபாா்டு வங்கியுடன் இணைந்து வேளாண் கல்லூரி இப்பயிற்சியை 3 நாள்கள் நடத்தியது. பயிற்சியைத் தொடக்கி வைத்து வேளாண் கல்லூரி முதல்வர் வேலாயுதம் பேசினார்.
பயிா் மேலாண்மைத் துறைத் தலைவா் மோகன்தாஸ், பயிா்ப் பாதுகாப்புத் துறைப் பேராசிரியா் திருமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினா். இயற்கை முறையில் மண் வளத்தை பேணுதல், பயிா் வளா்ச்சியில் உரங்களின் பயன்பாடு, அங்கக முறையில் பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் என பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞானிகள் பேசினா்.
காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டு, நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளைக் கண்டறிவதற்கான பயிற்சியளிக்கப்பட்டது.
நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா் மற்றும் நூற்புழுவியல் துறை உதவிப் பேராசிரியை சண்முகப்பிரியா ஆகியோா் பயிற்சியை ஒருங்கிணைத்தனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/