தஞ்சாவூர் ஆக 06: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பெட்ரோல் – டீசல் விற்பனை நிலையங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் தஞ்சாவூா் ரயிலடியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயா்வால் நாளுக்கு நாள் ஏற்படும் செலவுகளால் பற்றாக்குறை என்பது அதிகரித்து வருகிறது. இதை ஓரளவுக்கு ஈடு கட்டும் வகையிலும், போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் அளிக்கவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் பெட்ரோல் – டீசல் விற்பனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலமும் பெட்ரோல் – டீசல் விற்பனையைத் தொடங்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி பொதுச் செயலா் கஸ்தூரி, ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் அப்பாத்துரை ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை கும்பகோணம், நாகை மண்டல தொமுச பொதுச் செயலா் பாண்டியன் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் தில்லைவனம் நிறைவுரையாற்றினாா்.

இதில் சிஐடியு தலைவா் மணிமாறன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், எச்.எம்.எஸ். பொதுச் செயலா் முருகேசன், எம்எல்எப் பொதுச்செயலா் பாலு, அறிவன் அம்பேத்கா் அமைப்பின் பொதுச் செயலா் மதியழகன், ஏஐடியுயூசி போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவா் துரை. மதிவாணன், வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/