தஞ்சாவூர் நவ 02: ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இனிப்பு கொடுத்து பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றன.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என 1612 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல் ஏற்கனவே செயல்பட்டு வரும் 439 மேல்நிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கின.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்ததால் தங்களது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கும் நண்பர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்றன.
முன்னதாக ஒவ்வொரு வகுப்பறையிலும் இடைவெளிவிட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் முகக் கவசம் அணிந்து இருந்தனர். மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பள்ளி முடிந்த பின்னர் கூட்டமாக வெளியே செல்லாமல் இடைவெளிவிட்டு செல்லும் வகையில் ஆசிரியர்கள் கண்காணித்தனர்.

முன்னதாக தஞ்சை அடுத்த மாரியம்மன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இனிப்பு கொடுத்து பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றார். நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து தஞ்சை மானோஜிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதேப்போல் சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் தஞ்சை எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு , பூங்கொத்து கொடுத்து வரவேற்று உற்சாகப்படுத்தினார்.

இதேபோல் திருவையாறில் எம்எல்ஏ., துரை சந்திரசேகரன், தஞ்சையில் எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோரும் மாணவ,மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/