தஞ்சை சூலை.15  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2021- 22 ஆம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கலந்துகொண்டு பேசுகையில்,

“கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தபோது கீழ்வேளூர் தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் வந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை தொடராமல் கிடப்பில் போட்டது. இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, “கடந்த ஆட்சியில் தொடங்கிய திட்டங்கள் அனைத்தையும் இந்த ஆட்சியில் தொடரும்” என எதிர்பார்க்க முடியாது என கைவிரித்து விட்டனர். 

இப்போது திமுக தேர்தல் அறிக்கையிலும் கீழ்வேளூரில் விவசாயக் கல்லூரி கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறும், கலைஞரால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற வகையிலும், அதனை மீண்டும் செயல்படுத்தவேண்டும். 

கீழ்வேளூரில் வேளாண் கல்லூரி அமைத்து தர வேண்டும். விரைவில் அறிவிக்கப்பட உள்ள வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். 

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு பொய்கை நல்லூர் தொடங்கி, வேதாரணியம் வரையில் விவசாயிகள் மாம்பழ உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் நான் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எனது தொகுதிக்கு உட்பட்ட பரவை என்ற ஊர் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்குகிறது. கடற்கரையோர விவசாயிகள் பயிர் செய்கின்ற காய்கறிகளை தினமும் பரவையில் கூடும் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே, பரவையில் குளிர்பதனக் கிடங்கு அமைத்து, காய்கறிகளை சேமித்து வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த சந்தையை விரிவாக்கம் செய்து தரவேண்டும். 

வேதாரண்யம் பகுதியில மல்லிகை, முல்லைப் பூக்கள் அதிகம் விளைகின்றது. பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். பூக்களுக்கு உரிய விலை நிர்ணயித்து, சந்தைப்படுத்தி விவசாயிகள் பயன்பெற உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

மேலும், இப்பகுதியில  விளைவிக்கப்படும் மலர்களை பயன்படுத்தி, வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வரும் நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்க தமிழக அரசுஏற்பாடு செய்ய வேண்டும்” இவ்வாறு பேசினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/