தஞ்சை சூலை.13–

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.


‘கொரோனா நோய்தொற்று ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இந்த சூழ்நிலையில் கூட, தனியார் பள்ளிகளில் வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 


தனியார் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் பணம் கட்டச் சொல்லியும், பணம் கேட்டும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்ததை விட கூடுதலாக தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

 
எனவே, அதை உடனடியாக கண்காணித்து, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சில அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி என்ற பெயரில் அதிகமாக கட்டணம் வசூலித்து வருவதையும் உடனடியாக மாவட்ட கல்வி நிர்வாகம் தலையிட்டு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


அப்போது, மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன், மாநகரத் தலைவர் சிரில் இமான், மாநகரக்குழு உறுப்பினர் அர்ஜுன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/