தஞ்சை ஏப்ரல் 18 தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று கலெக்டர் கோவிந்தராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். வல்லம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பஸ்சில் ஏறி, பயணிகள் முககவசம் அணிந்திருக்கிறார்களா? இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணம் செய்கிறார்களா? என்று கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். முககவசம் அணியாமல் யாராவது வெளியே வருகிறார்களா? என்பதை போலீசார், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போதும் 10 ஆயிரம் டோஸ் வந்துள்ளது. இதுவரை 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து 50 இடங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டருடன் தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் பாலசுப்பிரமணியம், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், வருவாய் ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலு ஆகியோர் இருந்தனர். 

செய்தி நாகராஜன் நிருபர்,
பூதலூர்.