தஞ்சாவூர்: ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதால் ரூ.270 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கூடிய சூழல் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் ஆவின் பால் விற்பனை நிலையங்களில் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவின் பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது அதே நேரத்தில் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. ஆவின் பால் விற்பனையும் 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

சென்னையில் 12 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 15 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது. தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கூடிய சூழ்நிலை இல்லை.

ஆவின் பால் நிலையங்களில் டீ மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யகூடாது. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் கூட முதல்வர் முறியடிப்பார். கடந்த ஓராண்டாக கொரோனா பரவலை முந்தைய அரசு கட்டுப்படுத்த முடியாத நிலையில் தற்போது 25 நாட்களில் பொது மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் கொரோனா பரவலை முறியடித்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்