தஞ்சை மே 30: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் மேற்கொண்டுள்ள முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கால், மொபைல் போன் சாட் மற்றும் கேம் ஆகியவற்றில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாகவும், சிறுவர்கள், இளைஞர்களுக்குப் பயன் அளிக்கும் விதமாக வீடு வீடாகச் சென்று இலவசமாகப் புத்தகங்களை வழங்கி வாசிப்பு பழகத்தை துாண்டும் இளைஞருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ–கமலா தம்பதியினர். இவரது மகன் சதீஸ்குமார் (31). இவர் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். புத்தக பிரியரான இவர் 1000க்கும் அதிகமான புத்தகங்களை, சேகரித்து வாங்கி தனது வீட்டு மாடியில் செம்மொழி வாசிப்பகம் என்ற பெயரில் சிறிய அளவில் நுாலகத்தை வைத்துள்ளார்.

இந்த நுாலகத்தில் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்டம், இலக்கியம், சிறுகதைகள், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இளைஞர்கள், சிறுவர்கள் மொபைலில் சாட் மற்றும் வீடியோ கேமில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் பலரும் மன அழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர்.

இதை மாற்ற இளைஞர் சதீஸ்குமார் முயற்சி மேற்கொண்டுள்ளார். சிறுவர்கள், இளைஞர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றப் புதிய முயற்சியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொல்லி வருகிறார். இவரின் செயலைக் கிராம மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.