தஞ்சை சூன் 16: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தில் அடிபட்டு பின்னங்கால்கள் முறிந்த ஆட்டுக்குட்டிக்கு நடைவண்டியை தயாரித்துள்ள இளைஞரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சைமன். பி.சி.ஏ பட்டதாரி. இவர் சிகப்பு நதி குருதி கொடை இயக்கத்தை நடத்தி இரத்த தானம் வழங்கி வருவதோடு தமிழ் கூடு என்ற அமைப்பின் மூலம் அப்பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஏழை. எளிய மாணவர்களுக்கு மாலை நேரத்தில் இலவச வகுப்புகளையும் நடத்தி வரும் தன்னார்வலர் ஆவார்.

ஆடு, மாடு, கோழி போன்றவற்றை சைமன் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டிக்கு மட்டும் தாய் ஆடு பால் கொடுக்க மறுத்ததால் சைமன் புட்டிபால் கொடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் அந்த ஆட்டுக்குட்டி சாலையில் சென்ற போது எதிர்பாராத வகையில் இரு சக்கர வாகனத்தில் அடிபட்டது. இதில் பின் கால்கள் இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்களிடம் காட்டிய போது இனிமேல் ஆட்டுக்குட்டியால் நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் இருந்த ஆட்டுக்குட்டியை இரவு நேரங்களில் தொட்டில் கட்டி உறங்க வைத்தும் சத்தான உணவுகளையும் வழங்கி வந்துள்ளார் சைமன். தொடர்ந்து ஆட்டுக்குட்டியை நடக்க வைக்கும் முயற்சியாக ரூ.1000 செலவில் நடைவண்டி ஒன்றை தயாரித்து அந்த ஆட்டுக்குட்டியை முன்கால்களால் நடக்க வைத்து விட்டார். இதையடுத்து சைமனை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பலரும் ஆட்டுக்குட்டியை விலைக்கு கேட்டபோதும் தர மறுத்து தற்போது அதற்கு நடை வண்டியை தயாரித்து நடக்க வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.