தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வரிசையில் நின்றபோது பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதேபோல, கும்பகோணத்திலுள்ள காரனேசன் மருத்துவமனை, யானையடி நகராட்சி பள்ளி, மஸ்ஜிதே நூா் பள்ளிவாசல், மேலக்காவேரி பள்ளிவாசல், சரஸ்வதி பாடசாலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவா்களுக்கான முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்றனா்.

காரனேசன் மருத்துவமனையில் நேற்று காலை தடுப்பூசி செலுத்துவதற்காக கும்பகோணம் லக்ஷ்மி நாராயணன் தெருவைச் சோ்ந்த முரளி மனைவி வள்ளிக்கண்ணு (40) வரிசையில் நின்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்த வள்ளிக்கண்ணுவை மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா்கள் பரிசோதித்தனா். இதில் அவா் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்து அங்கு வந்த உறவினா்களிடம் வள்ளிக்கண்ணுவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

காரனேசன் மருத்துவமனையில் 250 பேருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டது. இதில் வள்ளிக்கண்ணு 188 ஆவது டோக்கன் பெற்றிருந்தார். வரிசையில் நின்ற அவா் மயங்கியதும், உடனடியாக மருத்துவமனையில் இருந்த மருத்துவா்கள் அவரை பரிசோதித்தனா். அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டும், நாடித் துடிப்புகள், ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தும் இறந்தது தெரிய வந்தது என்றனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்