தஞ்சாவூர் நவ 18: போடாத சாலைக்கு, அதற்குரிய பணம் ரூ.6 லட்சத்தை மோசடி செய்த ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கமும், தற்காலிக பணியாளர் ஒருவரை பணி நீக்கமும் செய்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019 -20ம் ஆண்டு தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சீராளூர் ஊராட்சியில் புதுத்தெருவுக்குத் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியின் கீழ் சிமென்ட் சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இச்சாலை அமைக்க ரூ. 14.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ரூ. 6.24 லட்சம் அளிக்கப்பட்டது.

இதுவரை சிமெண்ட் சாலை அப்பகுதியில் அமைக்கப்படவில்லை. இதற்காக வழங்கப்பட்ட ரூ. 6 லட்சமும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், சீராளூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் புகார் மனுவை அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்த கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த்திற்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதன் பேரில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளர் (ஊராட்சி வளர்ச்சி) ஹேமலதா, தஞ்சாவூர் ஒன்றிய முன்னாள் பணிப் பார்வையாளரும், தற்போதைய திருப்பனந்தாள் பணிப் பார்வையாளருமான திருமாறன், பணிப் பார்வையாளர் செந்தில்குமார் ஆகியோரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளராகப் பணியாற்றிய சாந்திலட்சுமியை பணி நீக்கம் செய்தார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/