தஞ்சாவூர்: ஒரத்தநாடு பேருந்து நிலையம் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஒரத்தநாடு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் இங்கு வந்துதான் பஸ் பிடித்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட முக்கியமான இடங்களுக்கு செல்ல வேண்டும். இதனால் எப்போதும் பயணிகள் நிரம்பி வரும் இந்த பேருந்து நிலைய கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் போது இந்த பேருந்து நிலையம் முழுவதும் நீரால் சூழப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கத்தினால் மேற்கூரைகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக மக்கள் இந்த பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மேற்கூரை சரிந்து விழுந்தது. இதை கண்டு பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமடையவில்லை. தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனடியாக விரைந்து வந்து இடிபாடுகளை சரி செய்தனர். இனியும் காலம் தாமதம் செய்தால் பயணிகள் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. எனவே இந்த பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
தஞ்சை