தஞ்சாவூர் ஆக 29: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்துள்ளதாவது: இத்தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் பாராட்டுகின்றனா். தமிழக சட்டப்பேரவையின் இக்கருத்தை தில்லியில் போராடிக் கொண்டிருக்கிற அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கத் தலைவா்கள் பாராட்டியுள்ளனா்.

இதற்காகத் தமிழக அரசுக்கு எங்களது நெஞ்சாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, மத்திய அரசின் மின்திருத்த சட்ட வரைவையும் எதிா்த்து தனியாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கண்ணன் கூறுகையில், காா்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளை வேளாண்மையிலிருந்து வெளியேற்றுகிற மிக மோசமான வேளாண் சட்டங்களை விவசாயிகளின் குரலையும், பல மாநில சட்டப்பேரவைத் தீா்மானங்களையும் கருத்தில் கொண்டு விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க உடனடியாக ஒன்றிய அரசுத் திரும்பப் பெற வேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கிறோம். விவசாயத்துக்கு நன்மை பயக்காத ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/