அக்டோபர்.20- தஞ்சை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்த பண்டிகை காலத்தில் தீ விபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன், அனைத்து விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஆபத்தில்லாத, அதிக சத்தம் எழுப்பாத பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

தண்ணீர் நிரப்பப்பட்ட வாளி, ஈரத்தில் நனைத்த கம்பளித் துணி மற்றும் முதலுதவி பெட்டி ஆகியவற்றை பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் பொழுது நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகள் அணிவதை தவிர்த்து பருத்தி ஆடைகள் அணிவதும், காலணிகள் அணிவதும் தீக்காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

அருகினில் எளிதில் தீ விபத்துக்களை ஏற்படுத்தும் குடிசை வீடுகள் இல்லாத,  மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட அபாயகரமான மின்சாதனங்கள் இல்லாத  திறந்த வெளிகளில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். வாகனங்கள் மீது வைத்தும்,  பாத்திரங்கள், கண்ணாடி பாட்டில்கள் கொண்டு மூடியும்  பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தங்களது மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிப்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் தீக்காயங்கள் ஏற்பட்டால் காயமுற்றவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

மருத்துவமனை அருகிலும், வயது முதியவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் இருக்கும் இடங்களிலும், அதிக புகை மற்றும் சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை பொதுமக்கள் தயவுகூர்ந்து தவிர்க்க வேண்டும்.


பட்டாசுகளால் ஏற்படும் கடுமையான சத்தமும், புகையும் மனிதர்களுக்கு மட்டுமல்லாது பறவைகள், ஆடு, மாடுகள் உள்ளிட்ட பிற விலங்குகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. எனவே பிற உயிர்களுக்கு சிரமம் ஏற்படுத்துவதை தவிர்த்து பொறுப்புணர்வுடன் தஞ்சை மக்கள் இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும்.

விபத்துகள் இல்லாத தீபாவளியாக இந்தத் திருநாளை கொண்டாடுவது  மட்டுமல்லாமல், இந்த பண்டிகை காலத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது அனைவரது கடமையாகும். கொரோனா நோயிலிருந்து பொது மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வரும் சூழலில், கூட்டங்களை குறைத்து அதிக சத்தம் எழுப்பக் கூடிய, காற்று மாசுபடுத்தக்கூடிய பட்டாசு, மத்தாப்புக்களை  முடிந்தவரையில் தவிர்த்து எளிமையாகவும், எல்லோருக்கும் பாதுகாப்பாகவும் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட தஞ்சை மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சிறிதும் தாமதிக்காமல் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி பண்டிகையை தஞ்சை மக்கள்  விபத்துக்கள் இன்றி, மகிழ்ச்சியுடன் கொண்டாட  தீயணைப்பு துறையின் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/