தஞ்சை சூலை 13: தஞ்சை சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பொது இ-சேவை மையத்தில் சான்றிதழ் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இவ்வாறு இனி நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் தாலுகா அலுவலகங்களில் முன்பு பெறப்பட்டு வந்தன. இப்போது இதுபோன்ற சான்றிதழ்கள் பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன

இந்த பொது சேவை மையம் தஞ்சை ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

பொது சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு குறைந்தது ஏழு நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் சான்றிதழ் பொதுமக்களுக்கு கிடைத்துவிடுகிறது. மக்கள் எந்தவித சிரமமும் இன்றி உரிய கட்டணத்தை மட்டுமே செலுத்தி சான்றிதழை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொது சேவை மையங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் முதல் பட்டதாரி சான்றிதழ், அடையாள அட்டை போன்றவை வாங்குவதற்காகவும் குடும்ப அட்டையில் திருத்தம் செய்யவும் மக்கள் அதிக அளவில் பொது சேவை மையங்களில் நாடி வருகின்றனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் சான்றிதழ் வாங்குவதற்காக நேற்று குவிந்திருந்தனர். இவர்கள் முக கவசம் அணிந்து வரிசையில் நின்றனர் ஆனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை.

பலர் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக அவர்களையும் அழைத்து வந்திருந்தனர். ஆன்லைன் செயல்பாடு மெதுவாக இருந்ததால் உடனடியாக சான்றிதழ்களை பதிவு செய்யவும் ஏற்கனவே கையெழுத்தான சான்றிதழை நகல் எடுத்து கொடுக்கவும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் விரல்ரேகை பதிவு செய்யவும் தாமதமானது. இப்படி சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. எனவே இனியும் இதுபோல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/