தஞ்சாவூர் அக் 10: தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே யூனியன் கிளப் செயல்பட்டு வந்தது. மாநகராட்சிக்கு உரிய இடத்தில் குத்தகை காலம் முடிந்தும் செயல்பட்டு வந்த இந்த யூனியன் கிளப்பின் 200 அடி நீளமுடைய சுற்றுச்சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நூற்றாண்டுகளுக்கும் மேலாக 29,743 சதுரஅடி பரப்பளவில், தஞ்சாவூர் யூனியன் கிளப் செயல்பட்டு வந்தது. 99 வருட குத்தகை அடிப்படையில் இயங்கி வந்தது. இதற்கானகுத்தகை காலம் முடிந்து விட்டதாக கூறி தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் குத்தகைக்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் யூனியன் கிளப் நிர்வாகத்தினர் அதற்கான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) 1975-ன் சட்டபடி கடந்த செப்.20-ம் தேதி, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து தஞ்சாவூர் மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்படுத்தி, அதற்கான அறிவிப்பை நுழைவு வாயிலில் ஒட்டி, தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் யூனியன் கிளப் என்ற போர்டை அகற்றிவிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி என புதிய போர்ட் வைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்த சுமார் 200 அடி நீளமும், 7 அடி உயரமுள்ள பழமையான சுற்றுச்சுவர், பாதுகாப்பின்றி இருந்தது. இதனால் அந்த சுற்றுச்சுவரை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/