தஞ்சாவூர் நவ 12 தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட 64 பயனாளிகளுக்கு ரூ.1.99 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட 64 பயனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.

இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பகுதி சேத நிவாரண தொகையாக ரூ.4100 வீதம் 24 பயனாளிகளுக்கு ரூ.98,400 மதிப்பிலான நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஓடு வீடுகளுக்கு பகுதி சேத நிவாரண தொகையாக ரூ.5200 வீதம் 12 பயனாளிகளுக்கு ரூ.62,400 மதிப்பிலான நிவாரண உதவித்தொகைகளும், காயமடைந்த 1 பசுங்கன்றின் உரிமையாளருக்கு ரூ.5000 மதிப்பிலான நிவாரண உதவித்தொகையும், காயம் ஏற்பட்ட 2 பயனாளிகளுக்கு ரூ.4,300 வீதம் 8600 மதிப்பிலான நிவாரண உதவித்தொகையும், மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளும், என மொத்தம் 64 பயனாளிகளுக்கு ரூ.1,99,600 மதிப்பிலான நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/