தஞ்சை மே 28: முழு பொதுமுடக்கம் நல்ல பலனை தரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, ஒரத்தநாடு வட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு தொடா்பாக மக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆட்சியா் மேற்கொண்டுள்ளார். எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம். எந்தவொரு வதந்திகளையும் நம்ப வேண்டாம். தஞ்சாவூா் மாவட்டத்தைப் பொருத்தவரை அரசு மிகவும் தயார் நிலையில் உள்ளது.

முழு பொது முடக்கத்துக்கு மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா். இந்த கொரோனா இரண்டாவது அலை சங்கிலியை உடைக்க வேண்டுமானால், மக்களின் ஒத்துழைப்பு முக்கியம். இரண்டாவது அலையை மட்டுமல்லாமல், மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளும் விதமாக முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த முழு பொது முடக்கம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதனுடைய முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொண்டு கடைப்பிடித்து வருகின்றனா். இது, நிச்சயமாக நல்ல பலனை தரும் என்பது மே 31ம் தேதிக்குப் பிறகு தெரிய வரும்.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையைப் போக்க 2 அல்லது 3 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் கோவிந்த ராவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் பலர் உடனிருந்தனா்.