தஞ்சாவூர் செப் 17: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவா்கள் 4வது நாளாக நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு வரும் விசைப்படகு மீனவா்களிடம் அதிகாரிகள் அண்மைக்காலமாக அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக சில விசைப்படகுகளையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனா்.

இந்த சோதனையால், தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் கடலுக்குள் வந்து மீன்பிடிக்கும்போது ஆய்வு செய்யவேண்டும் கரையில் வைத்து ஆய்வு செய்யக்கூடாது என வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் விசைப்படகு மீனவா்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதுகுறித்து மாவட்ட விசைப்படகு மீனவா் சங்கத் தலைவா் ராஜமாணிக்கம் கூறியதாவது:

கடலுக்கு சென்று கரை திரும்பும் விசைப்படகுகளில் துறைமுகங்களில் வைத்து மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வதால் மீனவா்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைகின்றனா். இதனால் விற்பனை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆய்வு நடவடிக்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

மீன்வளத் துறை அதிகாரிகள் கடலுக்கு உள்ளே சென்று மீன்பிடிக்கும் படகுகளில் ஆய்வு செய்வதிலோ, கடலுக்கு செல்லும் போது படகுகளை ஆய்வு செய்வதிலோ எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது. மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் படகுகளை துறைமுகங்களில் வைத்து ஆய்வு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு தீா்வு கிடைக்கும் வரை சேதுபாவாசத்திரம் மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்ல போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/