தஞ்சை பிப்.29– பள்ளியக்ரஹாரம் பகுதியில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என வாலிபர் சங்க கிளை அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

தஞ்சாவூர் அருகே உள்ள பள்ளியக்ரஹாரம் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை அமைப்பு கூட்டம், மாநகரத் தலைவர் ஹரிபிரசாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிளைத் தலைவராக பிரவீன், செயலாளராக ஹரிஹரன், பொருளாளராக இளவரசன், துணைத் தலைவர்களாக ஹானஸ்ட் ராஜ், வினோத், துணைச் செயலாளர்களாக குலோத்துங்கன், பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, இந்திய மாணவர் சங்கம் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர். 

கூட்டத்தில், “பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றுப் படுகையில், குடிநீர், விவசாயத்தை பெரிதும் பாதிக்கும், சட்ட விரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.