தஞ்சாவூர் ஜன 10: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி, பயணம் செய்வதற்காக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன.11) முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.

இதேபோல, திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்துக் கழக இயக்கப் பகுதிக்கு உள்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகரப் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு வழித்தடப் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழித்தடப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.

பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்குச் செல்ல ஜனவரி 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/