தஞ்சாவூர் சூலை 30 : பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூர் பகுதியில் உள்ள செங்கழுநீர் ஏரியில் தூர் வாரும் பணியை பார்வையிட்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் 9 – 12 ம் வகுப்புகள் திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டது. கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. தடுப்பூசி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தாலும், அது எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் போது எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு பள்ளி திறப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. முதல்வர் எப்படி சொல்கிறாரோ அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப்பணியிடங்கள் உள்ள விவரம் தெரியவரும். அதனை அடிப்படையாகக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளையும் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/