தஞ்சை சூன் 25: விண்ணப்பித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை இரண்டே நாளில் நிறைவேற்றி உள்ளார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் விளாா் சாலை பகுதியைச் சோ்ந்த பழனிவேல் தனது மகன் சச்சிதானந்தம் (25) நூறு சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதன் அடிப்படையிலும், தனது ஏழ்மை மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் நோக்கத்திலும் கடந்த 22ம் தேதி ஒரு மனுவை வழங்கினாா்.

இதன் அடிப்படையில் உடனடியாகத் தீா்வு காண மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலருக்கு ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டாா். இந்த ஆய்வில் சச்சிதானந்தம் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது உறுதி செய்யப்பட்டது இதையடுத்து உடனடியாக ஆட்சியா் தன் விருப்ப நிதியிலிருந்து இரு சக்கர நாற்காலி, மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 1,500 வழங்குவதற்கு ஏற்பாடு செய்து நேற்று சச்சிதானந்தம் வீட்டுக்கு நேரில் சென்று ஆணையை வழங்கினாா்.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) விஜயலட்சுமி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடன் சென்றனர். மனுவை விசாரித்து இரண்டே நாட்களில் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்