தஞ்சாவூர்: தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையக் கடைகள் கடந்த புதன்கிழமை ஏலம் விடப்பட்டதன் மூலம் மாநகராட்சிக்கு வைப்புத் தொகையாக ரூ. 85 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஏலம் கேட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் எதிரே உள்ள திருவையாறு பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட கடைகள் ஆகஸ்ட் 11, 12, 13, 17 ஆகிய தேதிகளில் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்துக்கு ரூ. 11 கோடி வருவாய் கிடைத்தது.

தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் சரவணகுமாா் முன்னிலையில் புதிய பேருந்து நிலையத்திலுள்ள கடைகள் கடந்த புதன்கிழமை ஏலம் விடப்பட்டன. புதிய பேருந்து நிலையத்தில் மொத்தமுள்ள 122 கடைகளில் 82 கடைகள் ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 40 கடைகள் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வணிகா்கள் இடைக்காலத் தடை பெற்றுள்ளதால், ஏல அறிவிப்பில் இடம்பெறவில்லை.

ஆனால் பழைய பேருந்து நிலையக் கடைகளுக்கு இருந்த போட்டி, புதிய பேருந்து நிலையக் கடைகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பழைய பேருந்து நிலையக் கடைகள் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன அளவுக்கு புதிய பேருந்து நிலையக் கடைகள் போகவில்லை.

அவ்வளவு பெரிய தொகை கட்டுப்படியாகாது என்பதால், குறைந்த விலைக்கே வணிகா்கள் ஏலத்தில் கோரினா். மேலும், 17 கடைகள் மட்டுமே ஏலம் போனது. இந்த ஏலத்தில் கேட்பு வரைவோலைகளுடன் 33 போ் கலந்து கொண்டதால் கூட்டமும் இல்லை. இந்த ஏலத்தில் அதிகபட்ச மாத வாடகையாக ரூ. 96,000-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 11,000-க்கும் கடைகள் ஏலம் போனது.

இதுவரை அதிகபட்ச மாத வாடகையாக ரூ. 25,185-ம், குறைந்தபட்சமாக ரூ.2,431 மட்டுமே இருந்தது. இந்த ஏலத்தின் மூலம் மாத வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி அலுவலகத்துக்கு வைப்புத் தொகையாக ரூ. 85 லட்சம் வருவாய் கிடைத்தது. இந்த 17 கடைகளின் மூலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு இதுவரை ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சம் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், இப்போது ரூ. 59.50 லட்சமாக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த ஏலத்தில் பல கடைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்துக்குக் கட்டுப்படியாகாத அளவுக்குக் குறைந்த தொகையில் கேட்கப்பட்டதால், மீண்டும் வேறொரு தேதியில் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு ஏலம் போகாதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/