தஞ்சாவூர் செப்.27- தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், தஞ்சாவூர் மாநகராட்சி, அம்மன்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவிடைமருதூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்று வரும் மூன்றாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அவர்கள், தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர்,.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பார்வையிட்டார்கள்.
இம்முகாமில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள், 100 சதவீதம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்த 21 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.99,999 வீதம் ரூ.3,99,996 பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் மற்றும் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,500 வீதம் ரூ.9,000 மதிப்பிலான செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான காதொலி கருவிகளையும், 18 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கான அட்டைகளையும், 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான மருந்து பெட்டகங்களையும் வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வுடன் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நடந்த முதலாவது சிறப்பு முகாமில் 1,16,902 நபர்களுக்கும், இரண்டாவதாக கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற முகாமில் 95090 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
மூன்றாவதாக இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 1,00,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 738 முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று மூன்றாவது முறையாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி முதலில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முன்னையம்பட்டி ஆரம்பப்பள்ளி, தஞ்சாவூர் மாநகராட்சிகுட்பட்ட பழைய வீட்டு வசதி குடியிருப்பு, அம்மன்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மணக்கரம்பை ஊராட்சி கணினி சேவை மையம் மற்றும் திருவிடைமருதூர் பேரூராட்சிகுட்பட்ட என்.ஜி.பி மஹால் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்தில் இதுவரை 16,43,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் 20,000 முகாம்கள் அமைக்கப்பட்டு 28 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இது 48 சதவீதம் ஆகும். பின்னர் நடைபெற்ற முகாமில் படிப்படியாக உயர்ந்து 56 சதவீதமாக அதிகரித்துள்ளது இதுவரை 17 சதவீதம்பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர் இன்று நடைபெற்று வரும் முகாம்கள் குறித்த விவரங்கள் நாளை கணக்கிடும் போது 60 சதவீதம் பேர் செலுத்தி இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை 21 ஊராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 1,10,971 பேர் மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளின் விபரங்கள் அந்தந்த நீட் தேர்வு எழுதிய மையங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு 333 மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தில் இருக்கிறார்களா என்று கேட்டறிந்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் இதுவரை 80 சதவீதம் பேரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். 20 சதவீதம் பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து இக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் 200 பேர் தேர்வு எழுதியதிலிருந்து மன அழுத்தத்தில் இருப்பதை கண்டறிந்து அவர்களுக்கு மன தைரியம், நம்பிக்கை அளிக்கப்பட்டு தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் மரு. செல்வநாயகம், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .H.S.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), துரை.சந்திரசேகரன் (திருவையாறு), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட ஊராட்சி தலைவர் .உஷா புண்ணியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் .வேலுமணி (தஞ்சாவூர்),.சுகந்தி (கும்பகோணம்), தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் .சரவணகுமார், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் .சுபா திருநாவுக்கரசு, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/