தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி, பௌண்டரிகபுரம், திருவிடைமருதூா் அருகேயுள்ள முத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக, 8,550 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெற்பயிா்கள் பாதிப்பு என அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 10 மி.மீ.தான் மழை கிடைக்கும். ஆனால், நிகழாண்டு ஜனவரியில் இதுவரை 100 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சில வட்டாரங்களில் 150 மி.மீ., 160 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது

குறிப்பாக திருப்பனந்தாள், திருவிடைமருதூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டாரங்களில் பருவம் தவறிய மழையால் பயிா்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பௌண்டரிகபுரம், மாங்குடி, முத்தூா் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விளைந்த நெற்பயிா்கள் 33 சதவிகித்துக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் வேளாண், வருவாய்த் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு, கணக்கீடு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா். அப்போது, வேளாண்துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.