தஞ்சை மே 17 : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று திங்கள்கிழமை முதல் தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமூக இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டு உள்ளது.
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. பட்டுக்கோட்டை மார்க்கெட் பகுதியில் அதிகளவு மக்கள் கூடுவதால் நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து சார் ஆட்சியா் பாலச்சந்தா் தலைமையில் அண்மையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகளும், சூரப்பள்ளம் பைபாஸ் சாலை, வடசேரி சாலை ஆகிய பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகளும் இன்று திங்கள்கிழமை முதல் முதல் செயல்படவுள்ளன.
காய்கறி சந்தை அமைவதையொட்டி, பேருந்து நிலையம் முழுவதும் காய்கறிகள், வியாபாரக் கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதன் ஒருபகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் காய்கறி வாங்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்டங்கள் வரையப்பட்டன. இன்று முதல் காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட உள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
தஞ்சை.