தஞ்சை மே 19 தஞ்சை மாவட்டம் ஒரே குடும்பத்தில் பெற்றோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால், அவர்களது குழந்தைகளை பராமரிக்க யாரும் இல்லை எனில் அவர்கள் இருவரும் குணமடையும் வரை அவர்களது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் ஆகிய எந்தப் பாலினத்தைச் சேர்ந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களை அரசின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்க வைத்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் நோய்த்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை நிரந்தரமாக தங்க வைத்து பராமரிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
எனவே ஆதரவற்ற குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியவந்தால் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக 04362-230121 என்ற எண்ணில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 04362-237014 என்ற எண்ணில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 04362-264505 என்ற எண்ணில் மாவட்ட சமூக நல அலுவலகம், 04362-237012 என்ற எண்ணில் குழந்தைகள் நலக்குழு அல்லது குழந்தைகள் சேவை மையம்1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அந்தக் குழந்தைகள் பற்றிய தகவல்களை கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு தலைவரான கிராம பஞ்சாயத்து தலைவர், செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதாரத்துறை கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை