தஞ்சை சூன் 20 தளா்வில்லாத பொது முடக்கக் காலத்திலும் இயக்கப்பட்டு வந்த தஞ்சாவூா் – சென்னை – தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் சேவை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பூதலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதி மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட மக்களுக்குப் பெரிதும் பயனளித்து வரும் உழவன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் உழவன் விரைவு ரயில், சென்னை – ராமேசுவரம் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களின் சேவை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை – தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில், சென்னை – ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதலும், தஞ்சாவூா் – சென்னை உழவன் விரைவு ரயில், ராமேசுவரம் – சென்னை விரைவு ரயில் திங்கள்கிழமை முதலும் இயக்கப்படவுள்ளன.

இதற்காக முழு முயற்சி மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்க செயலா் கிரி தெரிவித்துள்ளாா்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்