தஞ்சை மே 27: தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யின் மனிதாபிமான செயலுக்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சையில் முழு ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் ஏழை கூலி தொழிலாளர்கள் 500 குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை தொழிலாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் வழங்கினார்:

இதுகுறித்து அவர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. மருத்துவப் பணி மற்றும் சிகிச்சைக்காக மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 500 ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 15 நாட்கள் பயன்படுத்தக்கூடிய அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளோம்.

யாராவது ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார். இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், இந்த ஊரடங்கு காலத்தில் தினக்கூலிகள் வருமானம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவார்கள், பசியை போக்குவார்கள் என நினைத்து எங்களது குடிசைகளை தேடி வீடுவீடாக வந்து தஞ்சை மாவட்ட எஸ்பி மளிகை பொருட்கள் வழங்கியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று தெரிவித்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்