தஞ்சை ஜன: 1:    தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,510 மையங்களில் ஐந்து வயதுக்குள்பட்ட 2.29 லட்சம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெற்றது.

மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்டு 2,29,141 குழந்தைகள் உள்ளனா். இவா்களுக்கு போலியோ தடுப்புச் சொட்டு மருந்து புகட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் 1,510 முகாம்கள் அமைக்கப்பட்டன.

இம்முகாம்களில் பொது சுகாதாரம், நகராட்சி, ஊட்டச்சத்து, சமூக நலம், கல்வி, ஊரக வளா்ச்சி, வருவாய் ஆகிய துறைகளைச் சோ்ந்தோா், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவி குழுக்கள் ஆகியோா் அடங்கிய 6,040 போ் பணியில் ஈடுபட்டனா்.

நெடுந்தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்கும், இடம் பெயா்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும் 51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

முன்னதாக, காலையில் தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் இப்பணியை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எஸ். மருதுதுரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஐ. ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி : சசிகுமார், நிருபர்,
தஞ்சை.