தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாநகராட்சியில் நேற்று நான்காவது நாளாக நடைபெற்ற பழைய பேருந்து நிலையக் கடைகள் ஏலத்தில், அதிகபட்சமாக ரூ. 1.07 லட்சம் மாத வாடகைக்கு ஒரு கடை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 93 கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 11- ம் தேதி தொடங்கியது. இதில், முதல் நாளில் வணிகா்கள் எதிா்ப்புக் காரணமாக ஒரு கடை மட்டுமே ஏலம் விடப்பட்டது.

பின்னா் மறுநாள் 12- ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 26 கடைகளும், 13-ம் தேதி 57 கடைகளும் ஏலம் விடப்பட்டன. இதில் போட்டி அதிகமாக இருந்ததால், மாத வாடகையாக ரூ. 50,000 முதல் ரூ. 70,000 வரை ஏலம் போனது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ. 9.50 கோடி வருவாய் கிடைத்தது.

தொடா்ந்து நான்காவது நாளாக நேற்று மீதமுள்ள கடைகள் ஏலம் விடப்பட்டன. இதில் பழைய பேருந்து நிலையத்திலுள்ள ஒரு கடை மாத வாடகையாக ரூ. 57,000-க்கு ஏலம் போனது. மேலும் பழைய பேருந்து நிலையத்திலுள்ள 2 உணவகங்கள், திருவையாறு பேருந்து நிலையத்திலுள்ள 8 உணவகங்களில் 3 உணவகங்கள் மாத வாடகையாக ரூ. 25,000 முதல் 27,000 வரையிலும் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

திருவையாறு பேருந்து நிலையத்திலுள்ள ஒரு பெரியக் கடை மாத வாடகையாக ரூ. 1.07 லட்சத்துக்கு ஏலம் போனது. இதுவே அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனதாகவும், நான்கு நாள்களில் நடைபெற்ற ஏலம் மூலம் மாநகராட்சிக்கு ஏறத்தாழ ரூ. 11 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், மாநகராட்சி வரலாற்றில் இது அதிகபட்ச வருவாய் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/