தஞ்சாவூர் சன:25- தமிழ் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், தாய்மொழி வழிக்கல்வியை உயர்த்திப் பிடிப்போம்! இந்தி -சமஸ்கிருத மொழி திணிப்பிற்கு எதிராக உறுதியுடன் போராடுவோம் தஞ்சாவூரில்,நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளின் 57-வது ஆண்டு நினைவுநாளில் உறுதிஏற்பு நாடுசுதந்திரம் அடைவதற்கு முன்பு 1938 களில் அப்போதைய ராஜாஜி அரசாங்கம் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கும் முடிவுகளை எதிர்த்து தமிழ் மொழி வழிக் கல்விக்காக போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன் ஆகியோர் தமிழ் மொழிக்காக போராடி உயிரை தியாகம் செய்தார்கள். அதை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினம் முதல் மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி மொழி கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். போராட்டங்கள் மூன்று மாதங்கள் நீடித்தது.
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து அலுவல் மொழி இந்தி என்ற முடிவில் இருந்து ஒன்றிய அரசு பின்வாங்கியது . தாய்மொழி காக்கின்ற மொழிப்போர் போராட்டத்தில் மயிலாடுதுறை சாரங்கபாணி , கீழப்பழுவூர் சின்னசாமி, சிவகங்கை ராஜேந்திரன், அய்யம்பாளையம் வீரப்பன் ,விராலிமலை சண்முகம், அரங்கராஜன் உள்ளிட்டோர் தீக்குளித்தும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டிலும் பலியானார்கள். மொழிப்போர் தியாகிகளின் 57ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் சார்பில் நடைபெற்றது. நிகழ்விற்கு முனைவர் தமிழறிஞர் . மு. இளமுருகன் தலைமை வகித்தார்.
இடதுசாரி பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைசெயலாளர் இராவணன் முன்னிலை வகித்தனர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் மொழி காக்க உயிர் நீத்த தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் நாட்டின் பண்பாடு ,கலாச்சாரம், தாய்மொழிவழிக் கல்வி, கலை இலக்கியம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம் , குலக்கல்வி முறையை மீண்டும் அமுல்படுத்துகின்ற புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம், பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும், தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகளை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும், சாதி களைந்த சமதர்ம தமிழகம் படைப்போம் என்றும் மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தலில் உறுதியேற்கப்பட்டது.
நிகழ்வில் தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாநகர செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், சிபிஐஎம் மாநகர செயலாளர் எம்.வடிவேலன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, முனைவர் துரை.குமார்,, ரயில் பயணிகள் சங்க நிர்வாகி சி.கனகராஜ் , ஆசிரியர் ஓய்வு லூர்துசாமி, எழுத்தாளர் சாம்பான், சமூக ஆர்வலர்கள் மூர்த்தி, சாமினாதன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/