தஞ்சை, ஜுன். 1: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்ஸீன் கோவிசீல்ட் தடுப்பூசிகள் இல்லாததால் ஆர்வமுடன் வந்த இளைஞர்கள், பொதுமக்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோணா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது முன் களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்றாகப் பிரித்து தடுப்பூசிகள் தஞ்சை மாவட்டத்தில் 117 இடங்களில் போடப்பட்டு வந்தன.

தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தஞ்சை மாநகராட்சி பகுதியில் நான்கு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தடுப்பூசி இல்லை என போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இது தெரியாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமுடன் வந்தவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.