தஞ்சாவூர் ஆக 27: தஞ்சாவூா் மாவட்டத்தில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் வடிமுனை குழாய்கள் அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மத்திய, மாநில அரசால் 60 சதவீத மானியத்துடன் இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு மின் வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும். மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்பட மாட்டாது. இலவச மின்சாரமும் ரத்து செய்யப்பட மாட்டாது.

விவசாயிகள் சூரியஒளி மின்சாரம் பயன்படுத்தியது போக, மீதமுள்ள சூரிய ஒளி மின்சாரத்தைக் கணக்கிட்டு, அதை தமிழ்நாடு அரசுக் கொள்முதல் செய்து, அதற்கான தொகையை மாதந்தோறும் கணக்கீடு செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 40,000 வரை கிடைக்கும்.

அரசு மானியம் 60 சதவீதம் போக, 40 சதவீத தொகையை விவசாயிகள் பங்குத் தொகையாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாத பட்சத்தில் அத்தொகைக்குக் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற உரிய வழிவகை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 9385290530, 9385290529 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/