தஞ்சை ஜன 28 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்துறை மற்றும் வருவாய்த் துறையின் சார்பில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு நடைபெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில், எந்த ஒரு பதிவும் விடுபடாமல் பதிவு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த இரண்டு விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரமுள்ள சோழபுரம் மேற்கு கிராமத்துக்குச் சென்றார். அவருடன் வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களும் சென்றனர்.

பின்னர் சோழபுரம் மேற்கு கிராமத்தில் சத்தியமூர்த்தி என்ற விவசாயியின் விவசாய நிலத்தைப் நேரில் பார்வையிட வேண்டும் என ஆட்சியர் கூறியபோது, நான்கு சக்கர வாகனம் செல்லாது, இருசக்கர வாகனத்தில்தான் வயலுக்குச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

இதையடுத்து வருவாய்த்துறை ஊழியர் இருசக்கர வாகனத்தை ஓட்ட, அதில் பின்னால் மாவட்ட ஆட்சியர் அமர்ந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட வயலை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயி சத்தியமூர்த்தி, ”இந்த வயலில் ஏக்கருக்கு 30 மூட்டைகள் நெல் அறுவடை செய்வது வழக்கம். ஆனால், தற்போது பெய்த தொடர் மழையினால் நெல் பதராகி ஏக்கருக்கு 10 மூட்டைகள் கூட மகசூல் கிடைக்காது என்பதால் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தேன்” என்றார்.

பின்னர் விண்ணப்பத்தில் உள்ள வங்கிக் கணக்கு, கணினி சிட்டா ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதேபோல் சோழபுரம் ஊராட்சியில் செல்லமுத்து என்பவரது வயலையும், அவர் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார் ஆட்சியர்.

அப்போது விவசாயிகள் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக் கூறினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர், உங்களது விண்ணப்பங்கள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்து உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது வேளாண் துறை துணை இயக்குநர் கோமதி, வட்டாட்சியர் கணேஸ்வரன், வேளாண் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

செய்தி க.சசிக்குமார், நிருபர்
தஞ்சை.